×

பாஜவிடம் இருந்து கைப்பற்றிய காங்கிரஸ் அரியணையில் மீண்டும் அமர்வாரா பூபேஷ் பாகேல்: விவசாயிகள் ஆதரவு கைகொடுக்கும் என நம்பிக்கை

மத்திய பிரதேசத்தை பிரித்து 2000வது ஆண்டில் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது சட்டீஸ்கர். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றான இது, உ.பி., மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா என 7 மாநிலங்களுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசத்தை அடுத்து 40 சதவீதத்துக்கு மேல் வனப்பரப்பை கொண்டுள்ள மாநிலமும் இதுதான். 2000வது ஆண்டு நவம்பர் 1ம் தேதி தனி மாநிலம் ஆன பிறகு, முதல்வர் அரியணையை முதன் முதலாகக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் ஜோகி தான்.

2000வது ஆண்டு நவம்பர் 9ம் தேதி முதல் 2003, டிசம்பர், 6ம் தேதி வரை இவர் முதல்வராக பதவி வகித்துள்ளார். பதவி வகித்த காலம் 3 ஆண்டு, 34 நாட்கள். அதன்பிறகு 2003, 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பாஜ கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ராமன் சிங் முதல்வராக இருந்தார். தொடர்ந்து 15 ஆண்டுகள் 10 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். முதல் இரண்டு தேர்தல்களிலும் ராஜ்நாந்துகாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட டாங்கர்காவ் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013ம் ஆண்டு தேர்தலில் ராஜ்நாந்துகாவ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல் முறை காங்கிரசும், அடுத்ததாக தொடர்ந்து 3 முறை பாரதிய ஜனதாவும் ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பதான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பூபேஷ் பாகேல் முதல்வராக உள்ளார். பாஜவிடம் இருந்து கைப்பற்றிய ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் படு தீவிரமாக உள்ளது. அண்மையில் நடந்த பல மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜவின் தோல்வி, காங்கிரசுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.

கடந்த முறை காங்கிரஸ் பெற்ற வெற்றி, இமாலய வெற்றி என்றே கூறலாம். காரணம், இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது இந்த கட்சி. அப்போதிருந்தே, இந்த கட்சியின் வளர்ச்சியும் அபாரமாக இருந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 5 இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 71 ஆக உயர்ந்துள்ளது. இடைத்தேர்தல்களில் ஒரு தொகுதி பாஜ கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதியாகும். இதன்மூலம் பாஜ எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 15 ல் இருந்து 14 ஆக குறைந்து விட்டது.

தற்போதைய முதல்வர் பூபேஷ் பாகேல், சட்டீஸ்கார் பிரிக்கப்படுவதற்கு முந்தைய ஒன்றுபட்ட மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங் தலைமையிலான அரசில் 1999 முதல் 2003ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். சட்டீஸ்கரின் முதலாவது வருவாய்த்துறை அமைச்சரும் இவரே. இளைஞர் காங்கிரஸ் தொடங்கி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், பொதுச் செயலாளர் என கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 1993ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 5 முறை பதான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

விவசாய கடன்கள் தள்ளுபடி, நெல்லுக்கான ஆதரவு விலையை 50 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை, முதல்வர் பதவியேற்று 2 மணி நேரத்தில் நிறைவேற்றியுள்ளார். விவசாயிகள் பிரச்னைகளை பாஜ கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வு, விதைப்புக்கான மானியம் என விவசாயிகளுக்கு ஆதரவான காங்கிரசின் நிலைப்பாடு மற்றும் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் மீண்டும் காங்கிரசையே அரியணை ஏற வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

வேளாண் பொருளாதாரத்தை வளர்ப்பதில் பெருமளவில் அக்கறை காட்டிய பூபேஷ் பாகேல், நீர் பாதுகாப்பு, இயற்கை உரங்களை பயன்படுத்துதல் என விவசாயிகளின் வருமானம் உயர வழி வகுத்துள்ளார். இந்த மாநிலத்தின் 65 தொகுதிகளில் விவசாயிகள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

The post பாஜவிடம் இருந்து கைப்பற்றிய காங்கிரஸ் அரியணையில் மீண்டும் அமர்வாரா பூபேஷ் பாகேல்: விவசாயிகள் ஆதரவு கைகொடுக்கும் என நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Amarwara Bhupesh Bagel ,Congress ,BJP ,Chhattisgarh ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...